உளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும்

|
உளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும்
Taj Hotel
-ஏ.கே.கான்

எனது 14 ஆண்டு பத்திரிக்கைத்துறை பணியில் எத்தனையோ உளவுப் பிரிவினரோடு பழகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

எனக்குத் தெரிந்து நம் உளவுப் பிரிவினரைப் போல மிகவும் மட்டமாக நடத்தப்படும் ஒரு அரசுத் துறையை நான் கண்டதில்லை.

நம் ஊரில் உளவுப் பிரிவு என்றால் அதன் முக்கியமான வேலை எதிர்க் கட்சிகளை உளவு பார்ப்பதும், முக்கியத் தலைவர்களுக்கு யாராலாவது ஆபத்து வரப் போகிறதா என்பதை கண்டறிவதும் தான்.

ரஜினி அரசியலுக்கு வரப் போகிறார்.. ஆர்.எம்.வீரப்பனை முன் நிறுத்தப் போகிறார் என்று ஒரு பரபரப்பு எழுந்த நேரம் அது. ஆர்.எம். வீரப்பன் தான் அப்போது மாபெரும் அரசியல் ஹீரோ. அப்போது அவரின் வீட்டின் முன் நிருபர்கள் தவம் கிடப்போம்.

எங்களிடையே இரு பெரியவர்களும் வந்து கலந்து நிற்பார்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் எங்களுக்கு நெருக்கமானார்கள்.

வீரப்பனை யார் யார் சந்திக்க வருகிறார்கள் என்பதை கண்காணிப்பது தான் இவர்களுக்கு வேலை. 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் அந்த வீட்டின் முன்போ, தெரு முனையிலோ நின்று கொண்டிருக்க வேண்டும். இது தான் அவர்களுக்குத் தரப்பட்ட வேலை.

அந்த இரு பெரியவர்களும் நம் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தனது 8 மணி நேர முடிந்த பின் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்புவார். அப்போது இன்னொரு சைக்கிளில் அடுத்த ஷிப்ட்காரர் வந்துவிடுவார்.

எக்ஸ்ட்ரா 'வரும்படி' இல்லாத போலீஸ் வேலை இது. இதனால் இவர்களுக்கு ஒரு டிவிஎஸ் 50க்குக் கூட வழியில்லை. மி்ஞ்சியது ஓட்டை சைக்கிள் தான்.

இது தான் நமது உளவுப் பிரிவின் அப்பட்டமான- உண்மை நிலை.

இன்னொரு கொடுமையும் உண்டு.

உளவுப் பிரிவின் மூத்த அதிகாரிகளிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள் இன்னும் கொடுமையானவை.

பெரும்பாலும் உளவுப் பிரிவுக்கு மாற்றப்படும் போலீசார் யார் தெரியுமா.. உடல் நலமில்லாதவர்கள், பிஸிகல் பிட்னஸ் இல்லாதவர்கள், ஓட முடியாதவர்கள், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் தான்.

இவர்களால் இனி போலீஸ் வேலையில் இருக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டால் அவர்கள் மாற்றப்படும் துறை தான் உளவுப் பிரிவு.

இப்படிப்பட்ட ஒரு போர்ஸை வைத்துக் கொண்டு தான் நம் நாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் நமது அரசுகள்.

இதற்கு மத்திய உளவுப் பிரிவான ஐ.பியும் ஒன்றும் சளைத்தது அல்ல. அங்கும் இதே நிலைமை தான். ஆனால், அவர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தரப்படுவதும் கொஞ்சம் நவீன கருவிகள் தரப்பட்டுள்ளதும் தான் வித்தியாசம்.

இந்தக் கருவிகளில் போன் ஒட்டுக் கேட்கும் கருவிகளும் அடக்கம். இது தரப்பட்டது சமூக விரோதிகளை, தேச விரோதிகளை கண்காணிக்க. ஆனால், ஐபி இதைப் பயன்படுத்துவது பெரும்பாலும் எதிர்க் கட்சியினரைக் கண்காணிக்கத் தான்.

இப்படிப்பட்ட ஒரு மட்டமான சிஸ்டத்திலும் கூட ஐபியும் மாநில உளவுப் பிரிவுகளும் இந்த அளவுக்காவது செயல்பட்டுக் கொண்டிருக்கக் காரணம், அதில் கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் மிகச் சிறந்த அதிகாரிகள், ஊழியர்கள், மிகச் சிறந்த மூளைகள், உண்மையிலேயே நாட்டை நேசிக்கும் நல்ல மனமுடையவர்கள் தான்.

இவர்களும் இல்லாவிட்டால் இந்த உளவுப் பிரிவுகள் என்றோ தனது முழு அர்த்தத்தையும் இழந்திருக்கும். மும்பையில் நடந்திருக்கும் இந்த புதிய வகையான தாக்குதல் இனி வரப் போகும் தாக்குதலுக்கு ஒரு முன்னோடியாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

கடல் வழியாக வந்து தாக்குவார்கள் என்று நம்மில் யாருமே கனவு கூட கண்டதில்லை. ஆனால், தீவிரவாதிகள் புதிய புதிய யுத்திகளை கண்டுபிடிப்பதிலும் அமலாக்குவதிலும் எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களிடம் உள்ள கருவிகள் மூக்கில் விரலை வைக்க செய்கின்றன. சாட்டிலைட் போன்கள், ஜிபிஎஸ் சிஸ்டம், பிளாக்பெர்ரி மொபைல்கள்... இதையெல்லாம் நமது உளவுப் பிரிவினரில் பெரும்பாலானவர்கள் பார்த்து மட்டுமல்ல, கேள்விப்பட்டது கூட இல்லை.

நம் உளவுப் பிரிவினரில் எத்தனை பேருக்கு இன்டர்நெட்டையாவது பயன்படுத்தத் தெரியும்?

ஐபி அட்ரஸை காப்பியடித்து போலி ஐபியை உருவாக்கி வேறு ஒருவரின் பெயரால் மெயில் அனுப்புகிறார்கள், வாய்ஸ் ரெகக்னிசன் சாப்ட்வேரை பயன்படுத்துகிறார்கள், போலி கிரெடிட் கார்டுகளை உருவாக்குகிறார்கள், வங்கதேசத்தின் சிம் கார்டை மாற்றியமைத்து லோக்கல் காலில் பேசுகிறார்கள்...

ஏகே 47 உள்பட நவீன ரக துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், கிரனைட்டுகள், படகுகள் இயக்குவது உள்ளிட்ட கடுமையான பயிற்சி என ஒரு கமாண்டோக்கள் அளவுக்குத் தயாராக்கப்பட்டு, மதத்தின் பெயரால் உயிரையும் தர மூளைச் சலவை செய்யப்பட்டு வந்திறங்கும் இவர்கள் நவீன யுக தீவிரவாதிகள்.

நம் போலீசாரில் பெரும்பாலானவர்களிடம் உள்ள துப்பாக்கி முதலாம் உலகப் போரில் அறிமுகமான .303 ரகத்தைச் சேர்ந்தது. ஒரு குண்டை சுட்டுவிட்டு அடுத்த குண்டை லோட் செய்வதற்குள் தீவிரவாதி நடந்தே அடுத்த தெருவுக்குப் போயிருப்பான். இதை நான் கிண்டலுக்காக எழுதவில்லை. நான் அந்த மனநிலையிலும் இல்லை. நம் இயலாமையை நினைத்து மனம் கணத்துப் போய் இதைச் சொல்கிறேன். (உளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும் என்ற தலைப்பே கூட எனக்கு மிகுந்த வருத்தம் தருவதே, விஷயத்தை நேரடியாக சொல்ல எனக்கு வேறு ஏதும் தோன்றவில்லை)

என்னைப் போலவே எத்தனையே இந்தியர்கள், இயலாமையால் மனம் வெதும்பியுள்ளனர்.

நமது உளவுப் பிரிவு, போலீஸ் படைகளின் இந்த நிலைமைக்கு அவர்கள் யாரும் காரணமில்லை. நம் அரசியல்வாதிகள் தான் காரணம்.

நமது பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் ஆரம்பிக்கும் லஞ்சம் சுடுகாட்டையும் தாண்டி இறப்புச் சான்றிதழ் பெறுவது வரை தொடர்கிறது. நமது போலீஸ் துறையையும் உளவுப் பிரிவையும் கெடுத்ததில் இந்த ஊழல் லஞ்சத்துக்கு முக்கிய பங்குண்டு.

மும்பை போலீசில் மிகச் சிறந்த அதிகாரியான ஹேமந்த் கர்கரேவை பலி கொண்டதில் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுக்கும் முக்கிய பங்குண்டு. ஆச்சரியமாக இருக்கிறதா..?. மும்பை தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு வாங்கப்பட்ட புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் அவ்வளவு மட்டமானவை. இந்த ஜாக்கெட்களும் தலைக் கவசங்களும் தரமானவையாக இல்லை என்று மும்பை போலீசார் தங்களது அரசுக்குத் தெரிவித்தும் அதையே வாங்கியிருக்கிறது அரசு.

வேறி வழியில்லாமல் அதைத் தான் அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை அணிவதற்குப் பதில் சும்மாவே போய் தீவிரவாதிகளை எதிர்கொள்ளலாம் என்று ஹேமந்த் நினைத்தாரோ என்னவோ. முதலில் அதை அணிந்தவர் பின்னர் அதைக் கழற்றிப் போட்டுவிட்டு கையில் பிஸ்டலோடு சென்றவர் தீவிரவாதிகளின் புல்லட்டுக்கு பலியாகிவிடடார்.

முதலில் நம் போலீசாரின் பயிற்சிகளை, ஆயுதங்களை பலப்படுத்துவதும், உளவுப் பிரிவை வலுவாக்குவதுமே இந்த நவீன யுக தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரே வழி.

தேசிய அளவில் தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரு பெடரல் ஏஜென்சி உருவாக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

இது குறித்து சில உளவுப் பிரிவினரோடு பேசுகையில், அவர்கள் இந்த ஏஜென்சியை வரவேற்பதை உணர முடிந்தது. அதே நேரத்தில் இந்த அமைப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் சில தகவல்களைத் தந்தனர். அவர்கள் சொன்னது இது தான்:

இந்த ஏஜென்சி வெறும் விசாரணை அமைப்பாக இருந்துவிடக் கூடாது. அது உளவு வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டும், கைதுகள் செய்யவும், தாக்குதலை நடத்தவும், சட்டத்தை அமலாக்கவும் அந்த அமைப்புக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.

இதற்கு 3 முக்கிய விஷயங்கள் வேண்டும். ஒன்று நிறைய பணம். இரண்டாவது பொலிடிக்கல் வில். மூன்றாவது அரசியல் தலையீடு இல்லாமை.

இந்தப் பிரிவில் சேர ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் பரிந்துரை லெட்டர் வாங்கி வர வேண்டும் என்ற நிலைமையோ அல்லது இதில் உள்ள பணியிடங்களை நிரப்பவும் இட ஒதுக்கீடோ வந்துவிடக் கூடாது. மிகச் சிறந்த மூளைகளை, தேசப்பற்று மிக்க இளைஞர்களை இதில் சேர்க்க வேண்டும்.

இந்த ஏஜென்சி பெயரளவுக்கு இல்லாமல் ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் ரகசியமாய் ஊடுருவி பரவ வேண்டும்.

இவர்களுக்கு மிகச் சிறந்த உளவுப் பயிற்சிகள், அதி நவீனக் கருவிகள் தரப்பட வேண்டும். பல மொழி அறிவு கொண்டவர்களாக, சங்கேத-ரகசிய குறியீடுகளை பிரேக் செய்பவர்களாக, எளிதில் மக்களுடன் கலந்துவிடுபவர்களாக இருக்க வேண்டும்.

ரா, ஐபியில் இந்தப் பயிற்சிகள் எல்லாம் தரப்படுவது தான். ஆனால், அவர்களுக்கு போதிய ஆள் பலம் இல்லை. (எதி்ர்க் கட்சியினரை உளவு பார்க்கவே இவர்களது எண்ணிக்கை நமக்குப் போதாதே)

இதனால் ஐபிக்கு போதிய ஆள் பலத்தைத் தருவதும் தீவிரவாதத்தை எதிர்க்க சீரியஸான ஒரு ஏஜென்சியை உருவாக்குவதும் தான் இந்த நவீன யுக தீவிரவாதத்தை எதிர்கொள்ள ஒரே வழி என்றனர் அந்த உளவுப் பிரிவினர்.

அரசியல் தலையீடு இல்லாத ஒரு முழுமையான அதி நவீன உளவு-தாக்குதல் ஏஜென்சி தான் இந்த நாட்டையும் மக்களையும் காக்க முடியும்.

இல்லாவிட்டால் அப்போதைக்கு நடந்த தீவிரவாதத் தாக்குதலை நினைவூட்டி பிரச்சாரம் செய்து தேர்தல்களில் ஒருவர் மாற்றி ஒருவர் வெல்லலாம்.. வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரலாம், ஆனால் நாடு மெல்ல சிதையும்.

மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்கும் நிலை வரும். இதைத் தான் தீவிரவாதம் எதிர்பார்க்கிறது.

ஊழலோ, லஞ்சமோ, ஜாதி அரசியலோ, மத அரசியலோ.. என்ன தான் செல்லறித்தாலும் ஜனநாயகம் என்பது இந்தியாவுக்குக் கிடைத்த மாபெரும் ஆயுதம். அந்த ஆயுதம் நம்மிடம் இருக்கும் வரை தான் இத்தனை மாநிலங்களும் இணைந்து நாம் ஒரு நாடாக இருக்க முடியும்.

ஜனநாயகத்தை இழந்துவிட்டால் நாடு துண்டு துண்டாகும்.. பாகிஸ்தான் ஐஎஸ்ஐயின் 'கிராண்ட் பிளானே' இது தான் என்கிறார்கள் உளவுப் பிரிவினர்.

இதற்கு பலியாகாமல் தப்ப தீவிரவாதத்தை நாம் தீவிரமாக, நேருக்கு நேர் எதிர்கொள்வது தான் ஒரே வழி. அதற்கு முதலில் நமது உளவு கட்டமைப்பை வலுப்படுத்துவது மிக மிக மிக அவசியம்.

(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)

3 comments:

Thamiz Priyan said...

நல்ல ஆராய்ச்சிக் கட்டுரை!

Anonymous said...

உளவுத்துறை மோசமாகக்காரணமே அரசியல்வாதிகள் அவர்கள் சுயநலனுக்காக உளவுத்துறையை பயன்படுத்த ஆரம்பித்ததுதான்.

ALIF AHAMED said...

தமிழ் பிரியன் said...

நல்ல ஆராய்ச்சிக் கட்டுரை!
//

இப்படி ஒரு உளவுதுறையை வைச்சிகிட்டு நாட்ட எப்படி காப்பாத்த முடியும்..?

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!